துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
துருக்கியில் காஸியண்டெப் நகரில் கடந்த 6 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் எல்பிஸ்டான் பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கமும், 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டன. நிலநடுக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சரிந்ததால் குடியிருப்புகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நிலநடுக்கப் பாதிப்பில் துருக்கி, சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதுவரை மொத்த உயிரிழப்பு 36 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மீட்புப் பணிகள் அனைத்துப் பகுதிகளிலும் முடுக்கி விடப்பட்ட நிலையில் சிறுவர்கள், பச்சிளம் குழந்தைகள், வளர்ப்புப் பிராணிகள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. மீட்புப் பணிகளில் இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் துருக்கிக்கும் சிரியாவிற்கும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் தொடர்ந்து மக்களை உயிருடனும் சடலமாகவும் மீட்ட வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தற்போது இரு நாடுகளிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இன்னும் உயிர்ப்பலி அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.