அமெரிக்காவில் டிக்டாக் தடைக்கு விதித்த இறுதிக்கெடுவில் எந்த மாற்றமும் இல்லையென அதிபர் ட்ரம்ப் அதிரடியாகக் கூறியுள்ளார்.
சீனாவின் பைட்டன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் பொழுதுபோக்கு செயலியை அமெரிக்காவின் பாதுகாப்பு நலன்கருதி தடை விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் முன்னர் அறிவித்திருந்தார். மேலும் அந்தத் தடையானது செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறியிருந்தார். அமெரிக்க மக்களின் தனிநபர் விபரங்கள் டிக்டாக் செயலி மூலம் சீன கம்யூனிச கட்சிகளால் கவனிக்கப்படுகின்றன என்பதே இத்தடைக்கான முக்கிய குற்றச்சாட்டாக ட்ரம்ப் முன்வைத்தார். டிக்டாக் நிறுவனம் தன் மீதான இந்தக் குற்றச்சாட்டை மறுத்து தனி நபர் விபரங்கள் மற்றும் பயனாளர்களின் தரவுகள் பாதுகாப்பாக உள்ளன என்று விளக்கமளித்தது.
இந்த விளக்கங்களை ட்ரம்ப் ஏற்க மறுத்து தடை உத்தரவில் கையெழுத்திட்டார். செப்டம்பர் 15-ஆம் தேதி இறுதிக்கெடு விதிக்கப்பட்டு தடை உத்தரவு கையெழுத்திடப்பட்டதும் பைட்டன்ஸ் நிறுவனம் டிக்டாக் செயலியை ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் கைமாற்றி விட திட்டமிட்டது. மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் இதற்கான பேச்சுவார்த்தையும் நடந்தது. பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படாததால் இம்முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. தடை அமலுக்கு வர இன்னும் ஐந்து நாட்களுக்கும் குறைவான நாட்களே இருப்பதால், டிக்டாக் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது ட்ரம்ப் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர், "டிக்டாக் தடைக்காக விதிக்கப்பட்ட காலக்கெடுவில் எந்த மாற்றமும் இல்லை. ஒன்று டிக்டாக் சேவை துண்டிக்கப்படும் அல்லது அவர்கள் ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க வேண்டும்" என்றார்.