உலக சந்தையில் எப்போதும் ஆப்பிள் நிறுவன பொருட்களுக்கு என்று தனி மதிப்பு உள்ளது. இதற்கு காரணம் அந்நிறுவனத்தின் தயாரிப்பில் வரும் பொருட்களின் சிறப்பம்சங்கள், புதிய அப்டேட்வசதிகள் போன்றவையே. இந்த நிலையில் கேமிங், வீடியோ உள்ளிட்ட புதிய வசதிகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதிகள் குறித்து விளக்கம் அளித்தார்.
அதன்படி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விளம்பர இடைவெளியின்றி பார்க்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளதாகவும், இந்த சேவைக்கு ஆப்பிள் டிவி ப்ளஸ் என்றும் அவர் அறிவித்தார். இந்த புதிய வசதியின் மூலம் தற்போது சந்தையில் பிரபலமாக உள்ள நெட்ஃப்லிக்ஸ், அமேசான், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக இச்சேவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நியூஸ் ப்ளஸ் என்று அழைக்கப்படும் செயலி வாயிலாக பிரபல செய்தித்தாள்கள் மற்றும் வார இதழ்களை எளிதாக படிக்க முடியும் என்றும் அவர் அந்த நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார். இந்த சேவைக்கென மாதத்திற்கு 10 அமெரிக்க டாலரை செலுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேம் பிரியர்களை கவரும் வகையில், ஆப்பிள் ஆர்கேட் எனும் செயலி, அறிமுகப்படுத்தப்படுள்ளது.
இந்த சேவை முதல்கட்டமாக 150 நாடுகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அமெரிக்க வாழ் மக்களுக்காக டிஜிட்டல் பேமண்ட் வசதியும், கிரடிட் கார்ட் வசதியையும் ஆப்பிள் நிறுவனம் தொடங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது.