அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசிக்கு, டிசம்பர் 2- ஆம் தேதி, பிரிட்டனும், டிசம்பர் 4- ஆம் தேதி பஹ்ரைனும் அனுமதி வழங்கின. அதேபோல கனடாவும் இந்தத் தடுப்பு மருந்தைத் தங்களது நாட்டில் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் நான்காவது நாடாக அமெரிக்கா சமீபத்தில் இணைந்தது.
இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் அடுத்த 24 மணிநேரத்திற்குள் கரோனா தடுப்பூசி, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும், அமெரிக்க மக்கள் அனைவருக்கும், கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். முதியவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு, தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை தர விரும்புகிறோம் எனவும் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், தற்போது அமெரிக்காவில், முதலாவது கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் அந்த அறிவிப்பில் அமெரிக்காவிற்கும், உலகத்திற்கும் கங்க்ராஜுலேஷன் என வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.