
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் முட்டுக்கட்டை போடுவதாகத் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்த 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக் கொள்ளப்படும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த 8ஆம் தேதி வழங்கியது.
ஆளுநர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவருக்கும் அறிவுரை வழங்கியது. ஆளுநருக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை பெற்று தந்ததற்கு, திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், கடந்த 17ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்ற ஆளுநர், ச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்ட வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (19-04-25) குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கரைச் சந்தித்துப் பேசியுள்ளார். முன்னதாக உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கையை விமர்சித்த குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசியதாவது, “குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?. ஜனநாயகத்திற்காக நாங்கள் ஒரு போதும் பேரம் பேசவில்லை. குடியரசுத் தலைவரை நீதிமன்றம் வழிநடத்தும் சூழ்நிலையை அனுமதிக்க முடியாது. உச்ச நீதிமன்றம் சூப்பர் நீதிமன்றம் போல் செயல்படுகிறது. நாம் எங்கு செல்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது” என்று நேற்று முன்தினம் (17-04-25) பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.