
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில் நேற்று வெளியான படத்தின் ட்ரைலர் பாடத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று நடந்த ‘ரெட்ரோ’ படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, “கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு மூவாயிரம் பேரை சந்தித்து அவர்களை கட்டிப்பிடித்துப் போட்டோ எடுத்துக் கொண்டேன். நான் யாருடனும் சும்மா எல்லாம் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாட்டேன். இரத்தம் தானம் உள்ளிட்ட நல்ல விஷயங்களை செய்தவர்கள் கூட தான் போட்டோ எடுப்பேன் என்று என்னுடைய பிறந்தநாளில் சொல்லியிருந்தேன். அதே மாதிரி , உங்களை தாண்டி மற்றவர்களுக்காக மற்றவர்களை நினைத்து நீங்கள் செய்த நல்ல காரியத்திற்கு மதிப்பளித்து உங்களை நான் அழைத்து போட்டே எடுத்துக்கொண்டேன். அப்போது போட்டோ எடுக்க வந்த ஒவ்வொருத்தரும் என்னிடம், ‘அண்ணா நீங்க நல்லா இருக்கீங்கல்ல, நல்லா இருக்கீங்கல்ல..’ என்ற அக்கரையுடன் கேட்டீர்கள். அந்த அன்புதான் என்னைச் செலுத்திக்கொண்டிருக்கிறது. நான் முன்னோக்கு போய்க்கொண்டிருக்கக காரணம் நீங்கள் மட்டும் தான்.
எனது வாழ்க்கை அரைநூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், வந்தவர்கள் அனைவரும் 20 வயதுதான் இருந்தார்கள். ஆனால் அவர்கள் அவ்வளவு அன்பை கொடுத்தார்கள். இந்த அன்பு இருந்தால் போதும், எப்பொழுதும் நான் நன்றாக இருப்பேன். இங்கே இருக்கும் தம்பி, தங்கைகளுக்கு சொல்றது என்னன்னா, நான் பத்தாவது படிக்கும் போது அனைத்து பாடத்திலும் பெயில் ஆயிடுவேன். ஆனால் ஒரே ஒருமுறைதான் பாஸ் ஆனேன், அதுவும் கடைசி பொதுத் தேர்வில். அதனால் வாழ்க்கையை நம்புங்கள். நிறைய அழகான விஷயங்கள் நடக்கும். வாய்ப்புகள் வரும்போது அதனை விட்டுவிடாதீர்கள். ஒருதருக்கு அவரது வாழ்க்கையில் மூன்று முறை வாய்ப்புகள் கிடைக்கும், அதனைத் தவறவிட்டு விடாதீர்கள். அதற்கு ஒரு உதாரணமாக நம்ம கார்த்திக் சுப்பாராஜை சொல்லலாம். ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்தார். ஆனால் அதெல்லாம் விட்டுவிட்டு ஒரு ரிஸ்க் எடுத்தார், இன்றைக்கு அவருக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. அதனால் எல்லோரும் ஒரு சின்ன ரிஸ்க் எடுக்கலாம்.
ரெட்ரோ படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதில் நானும் பூஜாவும் ஒரு காட்சியில் ‘தம்மம்’ குறித்து பேசுவோம். ‘தம்மம்’ என்பது நோக்கம்(purpose). ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அதேபோன்று எனது நோக்கம் என்னவென்றால், அகரம் அறக்கட்டளை. அகரம் அறக்கட்டளையை எல்லோரிடமும் கொண்டு போய் சேர்க்க முடிந்ததற்கு நான் மட்டுமே காரணம் அல்ல, நீங்கள் எல்லோரும் தான் காரணம். நீங்கள் கொடுத்த சக்தியால்தான் என்னால் செய்ய முடிந்தது. நான் சொன்னதுபோல், ஒரு ஆவ்ரேஜானா மாணவனான எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுத்து, இப்போது 8000 தம்பி தங்கைகளை படிக்க வைத்து பட்டதாரி ஆக்கியிருக்கிறேன். எல்லோருக்கும் நன்றி” என்றார்.