இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக லண்டன், கலிஃபோர்னியா உள்ளிட்ட நகரங்களில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின், 'புராரி' பகுதியில் அமைந்துள்ள மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய அரசுடன் ஐந்து கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில், அடுத்த சுற்று பேச்சுவார்த்தை வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக லண்டன், கலிஃபோர்னியா உள்ளிட்ட நகரங்களில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
கலிஃபோர்னியாவில் கார் பேரணி மேற்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு முன்பு ஒன்றுகூடி, கட்டிடத்தை நூற்றுக்கணக்கான கார்களுடன் வட்டமடித்தும், தொடர் ஹாரன் ஒலி எழுப்பியும் கவனத்தை ஈர்த்தனர். அதேபோல லண்டனில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, லண்டனில் உள்ள இந்திய உயர் மட்ட குழு அலுவலகம் முன் "விவசாயிகளுக்கு நாங்கள் இருக்கிறோம்" என கோஷமெழுப்பியதோடு, "விவசாயிகளை விற்பனை செய்துவிடாதீர்கள்" என பதாகைகளை ஏந்தியிருந்தனர்.