Skip to main content

"வெறும் 11780 ஓட்டு வேணும்" - தேர்தல் அதிகாரியை எச்சரித்த ட்ரம்ப்! 

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

trump

 

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பாகவும், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இந்த வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, தேர்தலில் முறைகேடு நடப்பதாக டிரம்ப் குற்றசாட்டுகளை எழுப்பி வருகிறார்.

 

நீதிமன்ற வழக்குகள், மறுவாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்குப் பிறகு ஜோ பைடன் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடங்கப்பட்டன. இதுவரை அவ்வாறு தொடரப்பட்ட 60 வழக்குகளை அந்நாட்டு நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன.

 

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு வரும் 6ஆம் தேதி, அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கவுள்ளது. இந்நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில், தான் வெற்றி பெற்றதாக தேர்தல் முடிவுகளை மாற்றுமாறு ட்ரம்ப் பேசுவதாக கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த ஆடியோவில் ட்ரம்ப், ஜார்ஜியா மாகாணத்தில் தான் வெற்றிபெற்றதாக தேர்தல் முடிவுகளை மாற்றுமாறு ஜார்ஜியா மாகாண செயலாளரும் தேர்தல் உயர் அதிகாரியுமான பிராட் ராஃபென்ஸ்பெர்கரிடம் கூறுகிறார். அதற்கு பிராட் ராஃபென்ஸ்பெர்கர் மறுப்பு தெரிவிக்கவே, ஜார்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், எனவே சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், அது பிராட் ராஃபென்ஸ்பெர்கருக்கும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் ட்ரம்ப் எச்சரிக்கிறார்.

 

இதன்பிறகு ட்ரம்ப், தான் வெறும் 11,780 வாக்குகளைப் பெற விரும்புவதாக பிராட் ராஃபென்ஸ்பெர்கரிடம் கூறுகிறார். அதற்கு பிராட் ராஃபென்ஸ்பெர்கர், தங்களிடம் உள்ள தரவுகள் சரியானவை என நம்புவதாகவும், இந்த விவகாரம் குறித்து நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.

 

அமெரிக்க ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள இந்த ஆடியோ, பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. எனினும் இதுகுறித்து ட்ரம்ப் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

 

சார்ந்த செய்திகள்