
உத்தரப் பிரதேச மாநிலம், ஜலான் அருகே குத்தாவுண்ட் பகுதியில் மத்திய சுகாதார மையன் ஒன்று செயல்பட்டு வருகிறது. சளியால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் ஒருவன், சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அப்போது மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் சுரேஷ் சந்திரா, சிறுவனுக்கு சிகரெட்டை கொடுத்து புகைப்பிடிக்க வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், மருத்துவர் சுரேஷ் சந்திரா, சிறுவனை வாயில் சிகரெட்டை வைக்கச் சொல்கிறார். பின்னர் அவர் சிகரெட்டை பற்ற வைத்து, சிறுவனை பலமுறை சிகரெட்டை இழுக்கச் சொல்கிறார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி, கண்டனங்களைப் பெற்றது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, மருத்துவர் சுரேஷ் சந்திரா உடனடியாக இடமாற்றம் உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த கூடுதல் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்.டி. சவுத்ரி தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டு, விரிவான அறிக்கை மாநில அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.