கிரிக்கெட் வீரர்கள் அரசு பணியில் சேர்வது வாடிக்கையான ஒன்று என்றாலும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவது அரிதான ஒரு விஷயம். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். அதேபோல இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் திசரா பெரேரா அந்நாட்டின் ராணுவத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.
30 வயாகும் திசாரா பெரேரா இதுவரை 161 ஒருநாள் போட்டிகளிலும், 79 டி20 போட்டிகளிலும், 6 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இலங்கை அணியின் முன்னணி வீரராக பெயரெடுத்துளார். இந்நிலையில், இலங்கை ராணுவ கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அழைப்பின் பேரில், திசரா பெரேரா, இலங்கை ராணுவத்தின் கஜாபா ரெஜிமன்ட் பிரிவில் மேஜராக பணியில் சேர்ந்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திசரா பெரேரா, "ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அழைப்பின்பெயரில் கஜாபா ரெஜிமென்டில் ராணுவ மேஜராக பணியில் சேர்ந்துள்ளேன். இதை என் வாழ்க்கையில் மிகப்பெரிய பாக்கியமாக, பரிசாக கருதுகிறேன். என்னுடைய சிறப்பான பணியை ராணுவத்துக்கும், கிரிக்கெட்டுக்கும் தொடர்ந்து செய்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.