Skip to main content

போலி ஏஜன்டுகளால் குவைத் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்

Published on 21/10/2022 | Edited on 21/10/2022

 

Tamils trapped  Kuwait by fake agents
கோப்புப்படம்

 

மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த 35 தமிழர்கள், குடும்ப வறுமை காரணமாக வெளிநாடு சென்று சம்பாதிக்க முடிவெடுத்துள்ளனர். இதனால், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஏஜென்சியிடம் வெளிநாட்டு வேலைக்காக ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தி உள்ளனர். இதனையடுத்து, செப்டம்பர் 4ஆம் தேதியன்று, பணம் செலுத்திய அனைவரும் மதுரையிலிருந்து மும்பைக்கும், மும்பையிலிருந்து குவைத் நாட்டிற்கும் விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

 

குவைத் நாட்டிற்கு வந்த அவர்கள் ஒரு நிறுவனத்தின் கட்டடப் பணிகளை ஒரு வாரம் மட்டுமே செய்துள்ளனர். அதன் பிறகு, ' இனி இங்கே உங்களுக்கு வேலை இல்லை, நீங்கள் வேறு இடத்தில் வேலை பார்த்துக் கொள்ளுங்கள்' என நிறுவனம் கூறியுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த 35 தமிழர்கள், அவர்களை குவைத் நாட்டுக்கு அனுப்பிய ஏஜென்சியை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அந்த ஏஜென்சியால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து தமிழ்நாட்டுக்கு  திரும்புவதற்கு அவர்களிடம் எவ்வித பணமும் இல்லாத நிலையில் 35 தமிழர்களும் குவைத் நாட்டிலேயே சிக்கியுள்ளனர்.

 

அதன் பின்னர் ஒரே அறையில் அனைவரும் உள்ளதாகவும், பத்து நாட்களாக உணவு இல்லாமல் தவித்து வருவதாகவும், அவரவர் குடும்பத்தினரிடம் இந்த தகவலை கூறி கதறி அழுதுள்ளனர்.  இந்த செய்தியை வீடியோ மூலம் குடும்பத்தினரிடம் தெரியப்படுத்தியதை அடுத்து குவைத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும்படி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அவரவர் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

 

இந்த செய்தியை ஊடகங்களில் பார்த்த வெளிநாடு வாழ் தமிழர் நலச் சங்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ள 35 தமிழர்களையும் நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கினர். அதன் பிறகு, குவைத்தில் சிக்கிய 35 தமிழர்களும் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

 

இதனையடுத்து, குவைத் இந்திய தூதரகத்துடன் வெளிநாடு வாழ் தமிழர் நலச் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் அடிப்படையில்  குவைத்தில் வேலைக்குச் சென்ற 35 தமிழர்களில் 9 தமிழர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம் பணம் இல்லாத காரணத்தால் குவைத்துக்கு அனுப்பிய ஏஜென்ட் நிறுவனமே அவர்களுக்கு விமான டிக்கெட் வாங்கி கொடுத்து, வழி அனுப்பி வைத்துள்ளது. மேலும் மீதமுள்ள 26 தமிழர்களும் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள தமிழர்களை, இந்திய தூதரகமும் தமிழக அரசும் விரைந்து மீட்டிட வேண்டும் எனவும் போலி ஏஜன்டுகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வெளிநாடு வாழ் தமிழர் நலச் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்