
கோடை வெயிலை முன்னிட்டு பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆளும் கட்சியினர் நீர் மோர் பந்தலைத் திறந்து வைத்து வருகிறார்கள். அந்த வகையில், திண்டுக்கல் மாநகரில் உள்ள கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு பகுதிச் செயலாளர்களிடம் மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தலை திறக்க உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தான் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திர குமார் பல வகையான பழங்களுடன் ஏற்பாடு செய்திருந்த நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்களையும் நீர்மோரையும் வழங்கினார். இதில் மாநகர மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், மாநகர துணை மேயரும் மாநகர செயலாளருமான ராஜப்பா மற்றும் மாவட்ட துணை செயலாளர் பீலால் உசேன், அக்பர் முருகானந்தம், இலா.கண்ணன் உள்பட கட்சி பொறுப்பாளர்களும், மாநகர கவுன்சிலர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார், “நீட் தேர்வில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அ.தி.மு.க. சார்பில் இன்று அஞ்சலி செலுத்தப் போவதாக கேள்விப்பட்டேன். இது மிகப்பெரிய நாடகம். தமிழகத்திற்கு நீட் தேர்வு கொண்டு வந்ததுக்கு யார் காரணம் என்று தமிழகத்தில் உள்ள எட்டு கோடி மக்களுக்கும் தெரியும். நீட் தேர்வு தமிழகத்தில் அனுமதித்தது யார் என்று உங்களுக்கே தெரியும் நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விட்டது அதிமுகவின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான். இன்றைக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு பேசுகிறார்.

இதே எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது தான் இந்தியா முழுவதும் நீட் தேர்வை மத்தியில் கூட்டணி வைத்திருந்த பாஜக கொண்டு வந்த போது தமிழகத்தில் நுழைய விட்டது இதே எடப்பாடி பழனிச்சாமி தான். கலைஞர் முதல்வராக இருந்த போதும் வரவில்ல. அது போல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதும் கொண்டு வரவில்லை. தமிழகத்தில் நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக ஆட்சியும் தான். அப்படி இருக்கும்போது அனிதா உட்பட 20 சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள் என்றால் இன்னும் 8 மாதத்தில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்துத் தான் நடத்துகிறார்கள். இது ஒரு நாடகம், மக்கள் அதை நம்ப மாட்டார்கள். அதுபோல் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை மக்கள் தோற்கடிப்பார்கள் இந்த நாடகம் மக்களிடம் எடுபடாது என்று கூறினார்.