
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தினார்.
சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலை நகர் பேரூராட்சி மற்றும் குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்களை சேர்ந்த 10 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 36 குடியிருப்புகளுக்குக் கொள்ளிடம் ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு கூட்டு குடிநீர் திட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் ரூ 255.64 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகள் குறித்த அலுவல் ஆய்வுக் கூட்டம் சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை, மின் துறை, வருவாய் துறை என அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைவில் முடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் 71 சதம் முடிவடைந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைவார்கள். சிதம்பரம் நகரத்தில் 36 சாலை பணிகளில் 27 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்புக்குத் தோண்டப்பட்ட சாலையில் மீண்டும் சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கூட்டு குடிநீர் திட்ட பணிகள் குறித்து நகராட்சி, மின் துறை, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் வாரந்தோறும் இத்திட்டப் பணிகளின் நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டு அறிக்கையினை வெளியிட அறிவுறுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. திட்டப் பணிகள் வருகிற ஆகஸ்ட் மாதத்திற்கு முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது” என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், நகராட்சி ஆணையர் மல்லிகா, பொறியாளர் சுரேஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் குமாரராஜா, தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர் வரதராஜன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் ஜெயந்தி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.