
நெல்லியாலம் பகுதியில் கான்கிரீட் பாலம் அமைப்பதற்கு வனத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் அந்த பகுதி பழங்குடியின மக்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது நெல்லியாலம் நகராட்சி. அங்குள்ள மரப்பாலம் பகுதியில் இருந்து கோழிக்கொல்லி எனும் பழங்குடியின கிராமத்திற்கு போக ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதற்காக நடைபாதை இரும்பு பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையில் அந்த இரும்பு பாலம் அடித்துச் சென்றது.
இதனால் அவதியடைந்த பழங்குடியின மக்கள் நடைபாதை இரும்பு பாலம் தீர்வல்ல எங்களுக்கு வாகனங்கள் செல்லும் அளவிலான கான்கிரீட் பாலம் வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர். இதற்காக 42 லட்சம் மதிப்பீட்டில் கான்க்ரீட் பாலம் கட்டப்படும் என நெல்லியாலம் நகராட்சி அறிவித்திருந்தது.இதனால் தங்களுக்கு தீர்வு கிடைக்கப் போகிறது என பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் தற்பொழுது ஆற்றின் மீது கான்க்ரீட் பாலம் அமைக்க முடியாது என வனத்துறை மறுத்துள்ளது.
வனத்தை ஒட்டிய பகுதியில் பாலம் கட்ட வனத்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற நிலையில் வனத்துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். வனத்துறை சார்பாக 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு நடைபாதை பாலம் மட்டுமே அமைக்கப்படும் மக்கள் தங்கள் பயன்பாட்டிற்கு அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வனத்துறை அறிவித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பழங்குடியின மக்கள் எங்களுக்கு அவசரத் தேவைக்கு வாகனம் செல்லும் வகையில் கான்கிரீட் பாலம் வேண்டும். தங்களுக்கு நடைபாதை இரும்பு பாலம் வேண்டாம் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பழங்குடியின மக்கள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.