ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவலாம் என்ற பயத்தால் தென்கொரியாவில் 47,000 பன்றிகள் கொன்று குவிக்கப்பட்டதால், ஆறு முழுவதும் ரத்த வெள்ளமாக மாறியுள்ளது.
ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நோயானது விலங்குகளிடம் வேகமாக பரவக்கூடிய, குணப்படுத்த முடியாத நோயாகும். ஆனால் இந்த நோய் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்காது எனினும், தென்கொரியாவில் இந்த நோய் குறித்த பயத்தால், அதனை கட்டுப்படுத்த சுமார் 47,000 பன்றிகள் கொன்று குவிக்கப்பட்டன.
கொல்லப்பட்ட பன்றிகளின் உடல்களை வடகொரியாவில் எல்லையையொட்டி இருக்கும் ராணுவமயமாக்கப்பட்ட பகுதியில் ஓடும் இம்ஜின் ஆற்றுக்கு அருகில் புதைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இப்பகுதியில் பெய்த கனமழையால் புதைக்கப்பட்ட பன்றிகளின் உடல்கள் வெளியே வர ஆரம்பித்தது. மேலும் அவற்றின் ரத்தம் வழிந்தோடி இம்ஜின் ஆற்றில் கலந்தது.
இதனால் ஆறு முழுவதும் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. ஆற்றில் கலந்துள்ள இந்த ரத்தத்தால் பிற விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பன்றிகள் நோய் தொற்று நீக்கப்பட்ட பின்னர்தான் கொல்லப்பட்டதாகவும், எனவே மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த சூழலை சரிசெய்ய அந்நாட்டு அரசாங்கம் துரித பணிகளை மேற்கொண்டு வருகிறது.