உலகையே இன்று அச்சுறுத்தி இயல்பு வாழ்க்கையை முழுவதுமாக முடக்கிப்போட்டிருக்கும் கரோனா வைரஸ் முதல்முதலாக சீனாவின் உகான் நகரத்தில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து பரவிய இவ்வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர இயலாமல் உலக நாடுகள் அனைத்தும் விழிபிதுங்கி நிற்கின்றன. பெரும்பாலான நாடுகளில் தொடர்ச்சியாக பல மாதங்கள் ஊரடங்கும் அமலில் உள்ளன. தற்போது சீனாவில் கரோனா பரவல் ஓரளவிற்கு குறைந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் சீனாவில் பிரபலமான 'மாயா பீச் தீம் பார்க்கில்' மக்கள் கூடி கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுவது மாதிரியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் குழுமியிருந்த மக்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளி என எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கைளைகளையும் மேற்கொள்ளவில்லை. இணையத்தில் வைரலான இந்தப் புகைப்படத்தை ஒரு சாரர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கரோனா பரவல் தொடங்கிய இடத்திலேயே இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது... இனி உலகம் முழுக்க நிலைமை மாறி இதே போல் இயல்பு வாழ்க்கை திரும்பும் என மற்றொரு சாரர் நம்பிக்கையளிக்கும் வண்ணம் பேசி வருகின்றனர்.