சவுதி அரேபியாவில் கரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளைச் சரி செய்யும் நோக்கில் மதிப்புக்கூட்டு வரியை உயர்த்துவதோடு, குடிமக்களுக்கு வழங்கிவந்த மானியத்தையும் நிறுத்தாவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பல லட்சம் உயிர்களைப் பறித்துள்ள கரோனா வைரஸ், எண்ணெய் வளத்தை நம்பி தொழில் செய்துகொண்டிருந்த வளைகுடா நாடுகளை மிகப்பெரிய துயரத்தில் தள்ளியுள்ளது. ஒருபுறம் கரோனா பரவல், மற்றொருபுறம் கச்சா எண்ணெய்யின் வரலாறு காணாத விலை வீழ்ச்சி எனச் சவுதி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மிகப்பெரிய சிக்கலில் சிக்கித் தவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த கரோனா பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளைச் சரி செய்யும் நோக்கில் மதிப்புக்கூட்டு வரியை உயர்த்துவதோடு, குடிமக்களுக்கு வழங்கிவந்த மானியத்தையும் நிறுத்தாவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை 1 ஆம் தேதி முதல் பொருள்கள் மீதான மதிப்புக்கூட்டு வரியை 5% முதல் 15% வரை உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், குடிமக்களுக்கு அரசு மூலமாக வழங்கப்பட்டு வரும் மானியமும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்காட்டுள்ளது. அதேபோல சவுதி அரேபியாவைக் கட்டமைக்கச் செயல்படுத்தப்பட்டு வரும் குறிப்பணி 2030 திட்டத்துக்கான நிதியைக் குறைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசின் இந்த அடுத்தடுத்த திட்டங்கள் அந்நாட்டுக் குடிமக்கள் மற்றும் புலம்பெயர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.