Skip to main content

சீனா வெளியிட்ட செய்தியால் சிக்கலில் அமெரிக்க ராணுவ அதிகாரி...

Published on 28/04/2020 | Edited on 28/04/2020

 

americn woman benassie targeted by chinese media

 

அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் மூலமாக, திட்டமிட்டு கரோனா வைரஸை சீனாவில் அமெரிக்கா பரப்பியுள்ளது என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.


கரோனா வைரஸ் தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, வைரஸ் பரவலுக்குச் சீனாதான் காரணம் எனத் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. கரோனா வைரஸ் பரவலுக்கு காரணமான சீனாவிடம், உலக நாடுகள் இழப்பீடு கோர வேண்டும் எனவும், சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் இந்த வைரஸ் பரவியதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். அதேபோல இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் சீனாவை இந்த விவகாரத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மேலும், சர்வதேச விசாரணைக்குழு மூலம் சீனாவில் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் உலக நாடுகள் பல கூறி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் மூலமாக, திட்டமிட்டு கரோனா வைரஸை சீனாவில் அமெரிக்கா பரப்பியுள்ளது என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. 

கடந்த அக்டோபரில் சீனாவின் வுஹானில் நடைபெற்ற ராணுவ வீரர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த மாட்ஜே பெனாஸி என்ற பெண் மூலம் அமெரிக்கா திட்டமிட்டு சீனாவில் கரோனா வைரஸை பரப்பியதாக சீன ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளது. வுஹானில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில், சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்ட பெனாஸி, கடைசி கட்டத்தில் விபத்துக்குள்ளாகி போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு சீனாவில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மூலமே சீனாவில் கரோனா பரப்பப்பட்டதாகவும், இது அமெரிக்காவின் சதி எனவும் சீன ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், உலகின் முதல் கரோனா நோயாளியும் பெனாஸிதான் என அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பெனாஸி, "சீனா வேண்டுமென்றே என்னை இந்த விவகாரத்தில் இழுத்துள்ளது. சீனாவின் சமூக வலைபக்கங்களில் என்னைப்பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டு, நான்தான் உலகின் முதல் கரோனா நோயாளி எனவும் பரப்பப்படுவது கவலையளிக்கிறது. இதனால் எனது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. எனக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையின்படி, எனக்கு இதுவரை கரோனா தொற்று இல்லை" என தெரிவித்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்