அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் ஆலோசனைக் குழுவில் பிரபல WWE நிறுவன தலைவரும், வீரருமான வின்ஸ் மக்மஹோன் பெயரையும் குறிப்பிட்டுள்ளார் ட்ரம்ப்.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.46 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ள சூழலில், அமெரிக்கா இதனால் மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. அந்நாட்டின் பொருளாதாரமும் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் வீழ்ந்த அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக புதிய ஆலோசனை குழு ஒன்றை அமைத்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.
சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா, மார்க் ஸுக்கர்பெர்க், டிம் குக் போன்ற தொழில் உலகைச் சேர்ந்த பலரும் அந்தக் குழுவில் இடப்பெற்றுள்ளனர். அதுபோல விளையாட்டுத்துறையில் இருந்தும் பல்வேறு நபர்களை, அத்துறை சார்ந்த பொருளாதார ஆலோசனைகளை வழங்குவதற்காக நியமித்துள்ளார் ட்ரம்ப். இந்தக் குழுவில் பிரபல WWE நிறுவனத் தலைவரும், வீரருமான வின்ஸ் மக்மஹோன் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரோடு, என்பிஏவின் ஆடம் சில்வர், என்எப்எல் தலைவர் ரோஜர் குடெல், எம்எல்பியின் ராப் மன்ஃபிரெட் மற்றும் என்ஹெச்எல் தலைவர் கேரி பெட்மேன் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.