இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து தவிர எந்தவொரு தனியார் வாகனமும் இயங்காத சூழலில் உணவுப்பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கும், மருந்துப் பொருட்களை கொண்டு செல்வதற்கும் மிகப்பெரிய சிரமத்தையை இலங்கை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
இலங்கையில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றிய நிலையில், கோத்தபய ராஜபக்சே தலைமறைவாகவுள்ளார். அவரது இருப்பிடம் குறித்து தற்போதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில், முன்னாள் அமைச்சரும் ராஜபக்சேவின் சகோதரருமான பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்கா செல்வதற்காக கொழும்பு விமான நிலையம் வந்தடைந்தார்.
அவருக்கு எதிராக அங்கிருந்த அதிகாரிகளும் பொதுமக்களும் கோஷம் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து, விமான நிலைய அதிகாரிகள் அவரை விமானத்தில் ஏற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தன்னுடைய பயணத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு பசில் ராஜபக்சே அங்கிருந்து கிளம்பினார். வெளிநாடு தப்ப முயன்ற பசில் ராஜபக்சேவை பொதுமக்களும் அதிகாரிகளும் தடுத்து நிறுத்திய சம்பவம் கொழும்பு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.