புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்தியா பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் பதட்டம் நிலவியது. தமிழகத்தை சேர்ந்த இந்திய வான்படை பைலட் அபிநந்தன் பாகிஸ்தானில் ராணுவத்தால் பிடிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஐ.நா சபையில் ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. ஏற்கனவே இந்த கோரிக்கை ஐ.நா வில் எழுப்பப்பட்டபோது சீனா தனது அதிகாரத்தால் அதனை மறைமுகமாக எதிர்த்தது என்று குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் இந்த கோரிக்கை ஐ.நா சபையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 4 முறை இந்த கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அது சீனாவின் தலையீட்டால் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் ஐ.நா விதிப்படி இந்த கோரிக்கை அடுத்த 10 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட வேண்டும். அப்படி செய்யும்பட்சத்தில் மசூத் அசார் வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியாமல் முடக்கப்படும் சூழல் உருவாகும்.