ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு புல்வாமாவில் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலை அடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கடந்த பிப்ரவரி 14 ல் இருந்து பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது.
இதனை அடுத்து பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய விமானப்படை பாகிஸ்தானிலுள்ள பாலகோட்டில் இருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது முகாம்களில் தாக்குதல் நடத்தியது. இதன் பின் நடைபெற்ற சண்டையில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார்.
உலகரங்கில் பாகிஸ்தான் உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என்று பல நாடுகள் கேட்டுக்கொண்டது. இந்திய அரசாங்கமும் பாகிஸ்தானுக்கு கோரிக்கை வைத்தது. அந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், கைது செய்யப்பட்டிருக்கும் இந்திய விமானப் படை வீரரை உடனடியாக விடுவிக்கிறோம் என்று தெரிவித்து, பின்னர் கைது செய்யப்பட்ட அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் நடந்த அன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ட்விட்டரில் ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆனது. பாகிஸ்தானில் ட்ரெண்ட் ஆனா இது பிறகு உலக ட்ரெண்ட்டிலும் இடம்பிடித்தது. இந்நிலையில் இது குறித்து இம்ரான் கான் தற்போது தன் டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "நோபல் அமைதி பரிசுக்கு நான் தகுதியானவன் இல்லை. காஷ்மீர் மக்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ப காஷ்மீர் பிரச்சினை தீர்த்து வைத்து, இரு நாடுகளின் சமாதான மற்றும் மனித முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் ஒருவரே இந்த பரிசுக்கு தகுதியானவர்" என பதிவிட்டுள்ளார்.