சாம்சங் நிறுவன தலைவர் லீ ஜே யோங் சிறைத் தண்டனை பெற்றுள்ள நிலையில், சாம்சங் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் முதலீடுகள் பெரும் சிக்கலைச் சந்தித்துள்ளன.
தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவராக லீ ஜே யோங் செயல்பட்டு வருகிறார். சாம்சங் குழுமத்தின் தலைவரும், லீ ஜே யோங்கின் தந்தையுமான லீ குன் ஹீ கடந்த ஆண்டு காலமான பிறகு அந்நிறுவனத்தின் தலைவராக லீ ஜே யோங் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், சாம்சங் நிறுவனத்தின் கீழ் இயங்கிவந்த இரண்டு இணை நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்காக, முன்னாள் தென் கொரிய அதிபர் பார்க் கியுன் ஹை தரப்பிற்கு லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக லீ ஜே யோங்கிற்கு கடந்த 2017-ஆம் ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதன்பின்னர், மேல்முறையீட்டில் அவருக்கான தண்டனை குறைக்கப்பட்டு, பின்னர் தண்டனை இடைநீக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பான மேல்முறையீடு வழக்கு சியோல் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, லீ ஜே யோங்கிற்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தென் கொரியாவின் நான்காவது மிகப்பெரிய கோடீஸ்வரரும், சாம்சங் நிறுவனத்தின் தலைவருமான இவருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சாம்சங் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்புக்குப் பின்னர், பங்குச் சந்தையில் கடும் சரிவைச் சந்தித்துள்ள சாம்சங் நிறுவனத்திற்கு எதிர்கால முதலீடுகளை ஈர்ப்பதில் புதிய சிக்கல்கள் எழுந்துள்ளன.