கடுமையான பொருளாதார நெருக்கடியில் ஈரான் நாட்டு மக்கள் சிக்கித் தவித்துவரும் நிலையில், அந்நாட்டில் மனித உடல் உறுப்புகளுக்கான சந்தை பெரிதும் விரிவடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கண்கள் முதல் சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஜ்ஜை என உடல் பாகங்கள் அனைத்தும் பொதுவெளியிலேயே விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தங்களது உடல்பாகங்களை விற்பதற்கான விளம்பரங்களை, அங்குள்ள தெருக்களில் விளம்பர போஸ்டர்களாகவே ஓட்டுகின்றனர். இதனை பார்த்து, கிட்னி தேவைப்படுபவர்களோ, அல்லது இடைத்தரகர்களோ இவர்களை தொடர்புகொண்டு விலை பேசி, உறுப்புகளை வாங்கிக்கொள்கிறார்கள்.
உறுப்பை விற்கும் நபரின் வயது, ஆரோக்கியம், உடல் உறுப்பின் ஆரோக்கியத்தன்மை, ரத்தவகை ஆகியவற்றை கொண்டு உறுப்புகளின் விலை தீர்மானிக்கப்படுகின்றன. ஏராளமான இளைஞர்களும் தங்களது உடல் பாகங்களை வறுமையால் விற்பதாகக் கூறி, தேவைப்படுவோர் அணுகுமாறு கோரி தெருக்கள் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்படுவது வாடிக்கையாகியுள்ளது. கொடையாளரின் ஆரோக்கியம், கொடையாளரின் உடனடி பணத் தேவை ஆகியவற்றைப் பொறுத்து ஒரு கிட்னி 7 லட்ச ரூபாய்க்கும், கல்லீரல் 35 லட்சம் ரூபாய், எலும்பு மஜ்ஜை ரூ.70 லட்சம் வரையிலும் விற்கப்படுகிறது.
அதுபோல கருவிழிகள் ரூ.14 லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதேபோல o -ve, b +ve ரத்த வகைகளை கொண்டவர்களின் உடல் உறுப்புகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. பொதுமக்களின் இந்த வறுமையை காரணமாக வைத்து சில மருத்துவர்களும், இடைத்தரகர்களும் இதில் கொள்ளை லாபம் பார்ப்பதாகவும், அரசு அதிகாரிகளுக்கு இவை குறித்து தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.