ஆப்கானிஸ்தானில் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வரும் நிலையில், அந்தநாட்டில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனையொட்டி ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்தியத் தூதரகம், அந்தநாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பான தூதரகத்தின் அறிவிப்பில், "பயங்கரவாத குழுக்கள், ஆப்கானிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். ஆப்கானிய பாதுகாப்புப் படைகள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெறுகிறது. இதற்கு இந்தியர்கள் விதிவிலக்கல்ல. மேலும், இந்தியர்கள் கூடுதலாகக் கடத்தப்படும் அச்சுறுத்தலையும் சந்திக்கிறார்கள்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, ஆப்கானிஸ்தானுக்கு வருகை தரும், ஆப்கானிஸ்தானில் தங்கியிருக்கும் மற்றும் பணிபுரியும் அனைத்து இந்தியக் குடிமக்களும், தங்கள் பணியிடத்திலும், வசிக்கும் இடத்திலும், பணியிடங்களுக்குச் செல்லும்போதும் பாதுகாப்பு குறித்து மிகுந்த விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்திய நாட்டினர் அனைவரும், அனைத்து வகையான அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக மக்கள் அதிகம் பயணம் செய்யும் நேரங்களில் பயணம் செய்வதைத் தவிர்க்க அறிவித்தப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாலைகளில் பயணிக்கும்போது, சாத்தியமான தாக்குதல் இலக்கான இராணுவ கான்வாய்கள், அரசாங்க அமைச்சகங்கள்/அலுவலகங்களின் வாகனங்கள், உயர் அதிகாரிகளின் வாகனங்கள் ஆகியவற்றிடமிருந்து தூரத்தைப் பராமரிக்க அறிவுறுத்தியுள்ள இந்தியத் தூதரகம், நெரிசலான சந்தைகள், ஷாப்பிங் வளாகங்கள், மண்டிகள், உணவகங்கள் மற்றும் பிற பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்தியர்களுக்கு அறிவுரை கூறியுள்ளது.
அதேபோல, "அத்தியாவசியமான பயணங்களின்போதும் அடிக்கடி நேரத்தையும் பாதையையும் மாற்றவேண்டும், நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்" என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களையும் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் வழங்கியுள்ளது.