உலகமே கரோனா பாதிப்பால் அவதிப்பட்டுவரும் நிலையில், கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், மூளையைத் தாக்கும் மர்ம நோய் மக்களை அச்சுறுத்திவருகிறது. இதுவரை அந்த மர்ம நோயால் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்த மர்ம நோய்க்கான காரணம் கண்டறியப்படவில்லை.
இந்த மர்ம நோய் தாக்கியவர்களுக்குத் தூக்கமின்மை, நினைவுத்திறன் குறைதல், பிரமை உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்து போனவர்களைப் பார்ப்பது போன்ற பிரமைகளும் இந்த நோய் பாதித்தவர்களுக்கு ஏற்படுகிறது. இது கனடா நாட்டு மருத்துவர்களைத் திகைக்கவைத்துள்ளது. அவர்கள் இந்த நோய்க்கான காரணம் தெரியாமல் திணறிவருகின்றனர். இந்த நோய் தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த மர்ம நோய் அச்சமூட்டும் விதமாக இருப்பதாக கனடா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "புதிய மற்றும் அறியப்படாத நோய் அச்சமூட்டுகிறது. நியூ பிரன்சுவிக்கில் வசிப்பவர்கள், நரம்பியல் நோயாக இருக்க வாய்ப்புள்ள இந்த நோய் குறித்து கவலையும் குழப்பமும் அடைந்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்” என கூறியுள்ளார்.