அமெரிக்காவின் அரசு ஒப்பந்த வேலைகளில் ஹெச்1பி விசாதாரர்களுக்கு இனி வாய்ப்பு அளிக்கப்படாது என ட்ரம்ப் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
ஹெச்1பி விசா என்பது அமெரிக்காவிற்கு வேலைக்கு தேடி வரும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசாவாகும். இந்த விசா மூலம் மண்ணின் மக்களுடைய வேலை வாய்ப்புகள் பறிபோகின்றன, எனவே இந்த விசாவை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வந்தன. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றவுடன் இந்த விஷயத்தில் மற்ற அதிபர்களை விட கூடுதல் கவனம் செலுத்த தொடங்கினார். அதனையடுத்து ஹெச்1பி உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விசாக்களை 2020 கடைசி வரை நிறுத்தி வைக்க சமீபத்தில் உத்தரவிட்டார்.
தற்போது வெளியிட்டுள்ள புதிய உத்தரவு பற்றி ட்ரம்ப் கூறும்போது, "அமெரிக்கர்களை வேலைக்கு எடுங்கள், அவர்களுக்கே ஒப்பந்தம் கொடுங்கள் என்பதே நான் கையெழுத்திட்டுள்ள புதிய ஒப்பந்தத்தின் மைய அம்சம். ஹெச்1பி விசா அமெரிக்கர்களின் வேலையை அழிக்க கூடிய ஒன்றாக இருந்துவிடக்கூடாது. குறைந்த சம்பளத்திற்கு பணி செய்ய தயாராக இருப்பதால் அமெரிக்கர்களை தவிர்த்து விட்டு வெளிநாட்டினர்களை பணியில் அமர்த்துவதை தவிருங்கள்" எனத் தெரிவித்துள்ளார் .
வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க இருகிறது. எனவே இது ட்ரம்பின் தேர்தல் வியூகமாகக் கூட இருக்கலாம் என்கின்றனர் சர்வதேச அரசியல் விமர்சகர்கள்.