Skip to main content

சபாஹர் திட்டத்திலிருந்து இந்தியாவை நீக்கும் ஈரான்... பின்னனியில் சீனா..?

Published on 14/07/2020 | Edited on 14/07/2020

 

iran plans to drop india from chabahar plan

 

ஈரான், இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையேயான மிகமுக்கியமான திட்டங்களில் ஒன்றான சபாஹர் திட்டத்திலிருந்து இந்தியாவை நீக்க முடிவுசெய்துள்ளது ஈரான். 

 

ஈரானின் முக்கிய துறைமுகமான சபாஹரில் இருந்து ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள ஜாஹேடன் பகுதியை இணைக்கும் வகையில் இந்தியா சார்பாக ரயில்வே பாதை ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான உடன்படிக்கையில் இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கடந்த 2016 ஆம் ஆண்டு கையெழுத்திட்டன. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் இடையே வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த திட்டத்திற்காக இந்தியா 1.6 பில்லியன் டாலர் நிதியுதவி செய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒப்பந்தம் போடப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில், இந்தியா இதற்காக எந்த முன்னெடுப்பையும் எடுக்கவில்லை என ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

 

இதனைக் காரணமாகக்கூறி இந்தியாவை இந்த திட்டத்திலிருந்து ஈரான் நீக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தை இந்தியாவின் நிதியுதவி இல்லாமலேயே மேற்கொள்ளப்போவதாக ஈரான் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானின் ரயில்வே துறையின்கீழ் முதற்கட்டமாக இதற்காக 400 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதற்கு பின்னணியில் சீனாவின் 25 ஆண்டுகால பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தமே காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சீனாவுடனான இந்த 400 மில்லியன் டாலர் ஒப்பந்தம், ஈரானின் உள்கட்டமைப்பு, உற்பத்தி, போக்குவரத்து மற்றும் எரிசக்தி திட்டங்களில் சீனாவின் முதலீட்டை அதிகப்படுத்தவும், ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகங்களைச் சீனா பெறுவதற்கும் வழிவகை செய்யும். இந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ள சூழலில் ஈரான், சபாஹர் திட்டத்திலிருந்து இந்தியாவை வெளியேற்ற முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்