நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்தில், அதில் பயணித்த 22 பேரும் பலியான நிலையில், 21 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய ஒருவரின் உடலைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
நேபாள நாட்டில் தாரா ஏர் நிறுவனத்தின் சார்பில் அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஞாயிறன்று நேபாளத்தின் பொக்காரோ விமான நிலையத்திலிருந்து சிறிய ரக 9 என்ஏஇடி விமானம் ஜோம்சோம் நகருக்கு கிளம்பியது. இதில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மானியர்கள், 13 நேபாளிகள் உட்பட 22 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களிலேயே விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. தீவிர தேடுதலுக்குப் பிறகு விமானம் இமயமலை தவளகிரி சிகரம் அருகே விழுந்து நொறுங்கியது தெரியவந்தது.
இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 22 பேரும் பலியாகினர். இவர்களது உடல்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுவரும் நிலையில், இதுவரை 21 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய ஒருவரின் உடலைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதிகப்படியான பனிமூட்டம் இருந்ததால் இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.