உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி கனடாவிற்கு சென்றார். அங்கு சென்ற உக்ரைன் அதிபருக்கு, கனடா நாடாளுமன்றத்தின் கீழவையில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதே போல், இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருக்கு ஆதரவாக நாஜிப் படையில் ராணுவ வீரராக இருந்த யரோஸ்லாவ் ஹூன்காவுக்கும் (98) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவர் தற்போது உக்ரைனில் இருக்கிறார் என்பதும். முதலாவது உக்ரைன் பிரிவு சார்பாக போர் புரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கனடா நாடாளுமன்ற கீழவையில் உக்ரைன் அதிபர் கலந்து கொண்டு உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, அவை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது அங்கு வந்த யரோஸ்லாவ் ஹூன்காவை, நாடாளுமன்ற கீழவைத் தலைவர் அந்தோனி ரோட்டா கெளவுரப்படுத்தினார். மேலும், அவர் ஹூன்காவை, ‘போர் நாயகன்’ எனக் குறிப்பிட்டு புகழாரம் சூட்டினார். அதுமட்டுமல்லாமல், அவரை கவுரவிக்கும் விதமாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட நாடாளுமன்ற அவையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்டி தலைவணங்கி மரியாதை செலுத்தினர்.
கனடா நாடாளுமன்றத்தில் நாஜிப் படையை சேர்ந்த வீரருக்கு பிரதமர் ட்ரூடோ உள்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்திய சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் உட்பட அனைவர் மத்தியிலும் கடும் கண்டனங்கள் குவிந்து வந்தன. அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்ற கீழவைத் தலைவர் அந்தோனி ரோட்டாவை ராஜினாமா செய்யும்படி பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வைத்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், அந்தோனி ரோட்டாவை ராஜினாமா செய்ய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவுறுத்தினார். இதையடுத்து, தனது பதவியை அந்தோனி ரோட்டா நேற்று (26-09-23) ராஜினாமா செய்தார்.
இது குறித்து விளக்கமளித்த அந்தோனி ரோட்டா, “ஹூன்காவை கவுரவிப்பதற்காக நான் எடுத்த முயற்சி தவறு. இதை பின்னர் நான் பல தகவல்களை தெரிந்துகொண்டதால் தான் எனக்கு தெரியவந்தது. நாடாளுமன்றத்தின் நடந்த சம்பவம் முற்றிலும் என்னுடையது. சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் உட்பட யாரும் தனது கருத்துக்களை வழங்குவதற்கு முன்பு நான் அறிந்திருக்கவில்லை. உக்ரைன் அதிபரின் வருகையின் போது தான், அவர் நாடாளுமன்ற நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். கனடாவிலும், உலகெங்கிலும் வாழும் யூத சமூகங்களிடம் நான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிப்பதோடு மன்னிப்பையும் கேட்க விரும்புகிறேன்” என்று கூறினார்.