ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அரசு அலுவலகங்கள் நிறைந்த பகுதியில் நேற்று தீவிரவாதிகள் சிலர் புகுந்து நடத்திய மனிதவெடிகுண்டு தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று மாலை நான்கு மணியளவில் இந்தத் தாக்குதல் நடைப்பெற்றது என்றும் மேலும் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே இந்த சண்டை ஏழு மணி நேரமாக நடந்தது என்றும் ஆப்கானிஸ்தான் உள்துறை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் நஜிப் தானிஷ் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலில் மொத்தம் ஐந்து தீவிரவாதிகள் இருந்தனர் அவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் ஒரு தீவிரவாதி சண்டை நடைபெற்றுகொண்டிருக்கும்போதே தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். அதில் 42 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு காவலரும் கொல்லப்பட்டார் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று போலீஸார் உட்பட 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நஜிப் தானிஷ் தெரிவித்துள்ளார்.