Skip to main content

கனடா வாழ் இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை

Published on 20/09/2023 | Edited on 21/09/2023

 

Ministry of External Affairs warns Indians living in Canada

 

இந்தியாவில் சீக்கியர்களுக்குத் தனி நாடு வேண்டும் என காலிஸ்தான் ஆதரவு குழுக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். அதில் கனடா நாட்டில் உள்ள இந்து கோவில்கள் மீது அதிக தாக்குதல் நடத்தப்பட்டதற்கு காலிஸ்தான் ஆதரவு குழுக்களுக்குத் தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்டது. மேலும், கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர். 

 

கனடாவில் உள்ள காலிஸ்தான் புலிப் படைப் பிரிவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் மற்றும் காலிஸ்தான் ஆதரவு குழுக்களின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதில் தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கனடா அரசு தெரிவிக்கப்பட்ட போதிலும் அங்கு காலிஸ்தான் ஆதரவு குழுக்களின் செயல்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருந்தது.

 

இந்நிலையில், காலிஸ்தான் புலிப் படைப் பிரிவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார், கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அவர், கனடாவில் குடிமகனாக இருந்துள்ளார். மேலும், அவர் சுர்ரே நகர குரு நானக் சீக்கிய குருத்வாராவில் தலைவராகவும் இருந்துள்ளார். இவருடைய படுகொலைக்கு இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளதாக காலிஸ்தான் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. 

 

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “இந்திய அரசாங்க ஏஜெண்டுகளுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் படுகொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன. கனடாவின் குடிமகன் ஒருவர் படுகொலைக்கு அந்நியர் ஒருவரின் அல்லது வெளிநாட்டு அரசின் தொடர்பு இருப்பது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், சில இந்தோ-கனடியர்கள் கோபத்திலும் அச்சத்திலும் உள்ளனர். இந்த விவகாரத்தில், உண்மை விவரங்கள் தெரிய கனடாவுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று கூறினார். 

 

இதனால் இந்தியா - கனடா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்தியத் தூதரக அதிகாரியை கனடா வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியேற உத்தரவிட்டிருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக கனடா தூதரக உயர் அதிகாரியை ஐந்து நாள்களுக்குள் வெளியேற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. மேலும், ஹர்தீப் சிங் நிஜாரின் கொலைக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக  கனடா அளித்துள்ள புகாருக்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. மேலும், இது அடிப்படை ஆதாரமற்ற அபத்தமான குற்றச்சாட்டு என இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, காலிஸ்தான் தலைவர் கொலையில் இந்தியா மீது கனடா அரசு குற்றம் சாட்டியதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. 

 

இந்த நிலையில், கனடாவில் வாழும் இந்தியர்கள், மாணவர்கள் உள்பட அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “கனடாவில் அதிகரித்து வரும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் அரசியல் ரீதியாக மன்னிக்கப்பட்ட வெறுப்புக் குற்றங்கள், குற்றவியல் வன்முறைகளைக் கருத்தில் கொண்டு கனடாவில் உள்ள அனைத்து இந்தியர்கள் மற்றும் அங்கு செல்லவிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சமீப காலமாக, அங்குள்ள இந்தியர்கள் குறிப்பாக இந்திய எதிர்ப்பு கொள்கைகளை எதிர்க்கும் இந்திய தூதரக அதிகாரிகள் குறிவைக்கப்படுகின்றனர். எனவே, கனடாவில் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்” என்று தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்