இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகி கனடாவில் வசிக்க தொடங்கியுள்ள ஹாரி, புகைப்பட கலைஞர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் தம்பதி அண்மையில் அறிவித்தனர். இவர்களின் இந்த முடிவு சர்வதேச அளவில் அரசியல்வாதிகள் மட்டும் பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் ஆகியோரின் இந்த முடிவால் அரச குடும்பம் கவலையடைந்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அறிக்கையும் வெளியிட்டது. இருப்பினும் அவர்களது முடிவுக்கு மதிப்பளித்து, அரச குடும்பத்திலிருந்து விலகி சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ள ஒப்புக்கொண்டது.
தங்களது நேரத்தை வடஅமெரிக்கா மற்றும் கனடாவில் பிரித்து செலவிட போவதாக இந்த தம்பதி அறிவித்த நிலையில், தற்போது இருவரும் கனடாவில் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், அவர்களின் வீட்டின் அருகில் இருக்கும் புதர்களில் மறைந்திருந்து புகைப்பட கலைஞர்கள் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இங்கிலாந்து ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. இதனால், கோபமடைந்துள்ள ஹாரி, தங்களை பின்தொடர்ந்து வந்தால், சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என புகைப்பட கலைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.