மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் 63 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜர் நாட்டின் அண்டை நாடான நைஜிரியாவில் அட்டகாசம் செய்துவரும் போகோஹரம் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. நைஜர் நாட்டின் மேற்கு எல்லை பகுதியில் உள்ள மாலி பகுதியில் அமைந்துள்ள சினகோட்ரர் தளத்தில் நேற்று முன்தினம் இரவு இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஆயுதங்கள் ஏந்தி இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்த பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 25 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
இதற்கு ராணுவம் தரப்பில் நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் 63 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம், இப்பகுதியில் ஐ.எஸ் அமைப்பினுடன் தொடர்புடைய ஒரு பயங்கரவாத குழு நடத்திய தாக்குதலில் 71 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.