எனது ஒருவாரப் பயணம் இந்தியா - கனடா இடையே உறவுகளை மேம்படுத்துவதற்கே தவிர, கைக்குலுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அல்ல என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஒருவார கால அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார் கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. தன் குடும்பத்தினருடன் கடந்த சனிக்கிழமை இந்தியா வந்த அவர், தாஜ்மகால், சபர்மதி ஆசிரமம், மும்பை வர்த்தகக் கூட்டம் என பலவற்றில் கலந்துகொண்டார்.
மும்பை வர்த்தகக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், ‘நான் கைக்குலுக்குவதற்கோ, புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதற்கோ இந்தியா வரவில்லை. மாறாக கனடா - இந்தியா இடையே இருக்கும் உறவை மேம்படுத்துவதற்கும், மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வந்திருக்கிறேன். இது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மட்டுமின்றி, இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவை, பொருளாதார, கலாச்சார மற்றும் வர்த்தக உறவை மேம்படுத்தும். இதை சாத்தியமாக்க நமக்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன’ என தெரிவித்தார்.
மேலும், ‘கனடாவும், இந்தியாவும் உலகின் மிகப்பெரிய இரண்டு ஜனநாயக நாடுகள். இந்தியா மக்கள்தொகையிலும், கனடா மேற்பரப்பு நிலத்திலும் ஜனநாயகத்தைக் கொண்டது. எனவே, நிச்சயமாக நம்மால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். இதை இரண்டு அரசுகளுக்கு இடையிலான உறவு என்பதைவிட இருநாட்டு மக்களுக்கான உறவு என்றே நான் சொல்வேன்’ எனவும் கூறியுள்ளார்.