Skip to main content

இஸ்ரேலிய பணயக்கைதிகள் மேலும் 5 பேர் விடுவிப்பு!

Published on 22/02/2025 | Edited on 22/02/2025

 

5 more Israeli hostages released

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வந்த போரால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்தது. கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என 250க்கும் மேற்பட்ட இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனிடையே பதிலுக்கு ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு இதுவரை 46 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து 15 மாதங்களாக நடந்து வந்த போர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் தலையீட்டின் காரணமாக காசா இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் ஒவ்வொரு வாரமும் மூன்று, நான்கு பேராக விடுவித்து வந்த நிலையில் இதுவரை 24 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பதிலுக்கு நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்து வந்தது.  

இந்நிலையில் பணயக்கைதியாக பிடித்து செல்லப்பட்டவர்களின் உயிரிழந்த 4 பேரின் உடல்களை சவப்பெட்டியில் வைத்து ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் நேற்று ஒப்படைத்தனர். சிரி பிபாஸ் என்ற பெண், அவரது இரு குழந்தைகள் ஏரியல், கபிர் மற்றும் லிப்சிட்ஸ் என்ற 83 வயது முதியவர் ஆகிய 4 பேரும் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில், பாதுகாவலர்களுடன் சேர்த்து கொல்லப்பட்டனர் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. பிடித்து செல்லப்பட்ட 250 பணயக்கைதிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் சனிக்கிழமையான இன்று(22.2.2025) ஹமாஸ் அமைப்பினர் மேலும் இஸ்ரேலில் பணயக்கைதிகள் 5 பேரை விடுவித்துள்ளது. காசாவில் இரண்டு தனித்தனி  இடங்களில் ஐந்து பேரும் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். பதிலுக்கு இஸ்ரேல் சுமார் 600 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  

சார்ந்த செய்திகள்