
பேரழிவின் முன்னோடியாக கருதப்படும் 'டூம்ஸ்டே மீன்' (Doomsday Fish) என்று செல்லப் பெயர் கொண்டு அழைக்கப்படும் துடுப்பு மீன் மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் தென்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையின் பாஜா சுர் என்ற ஆழமற்ற நீரில் ஒரே ஒரு டூம்ஸ்டே மீன் கரையில் ஒதுங்கியது. பிப்ரவரி தொடக்கத்தில் கடற்கரைக்கு சென்ற ஒரு குழுவினர் கரையில் நீந்திய அந்த வகை மீனை கண்டு அதிர்ச்சியடைந்து வீடியோவாக பதிவு செய்தனர்.
டூம்ஸ்டே மீன் மெல்லிய உடலையும், இடைவெளியான வாயையும் கொண்டுள்ளது. மக்களால் அரிதாகவே அதை காணமுடியுமாம். ஜப்பானிய புராணங்களில், டூம்ஸ்டே மீன்கள் அழிவின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன. இது வரவிருக்கும் பூகம்பங்களைக் குறிக்கிறது என்ற கூற்று உள்ளது. டூம்ஸ்டே மீன் கரை ஒதுங்கினால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என ஜப்பானியர்களால் நம்பப்படுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு 20-க்கும் மேற்பட்ட டூம்ஸ்டே மீன்கள் ஜப்பான் கடற்கரையில் கரை ஒதுங்கின. அந்த ஆண்டு அங்கு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு ஜப்பான் வரலாற்றில் மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தியது. இந்நிலையில் மெக்சிகோவில் டூம்ஸ்டே மீன் ஒன்று தென்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.