
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுக்கு மேல் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரம் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. அதே இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் ரஷ்ய அதிபர் புடினுடன் தொலை பேசியில் உரையாடினார். அதன் தொடர்ச்சியாக இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, உக்ரைன் அதிபரிடம் டிரம்ப், “லட்சக்கணக்கான உயிர்களோடு ஏன் நீங்கள் விளையாடுகிறீர்கள்?. இதன் மூலம் இந்த நாட்டை நீங்கள் அவமதிக்கிறீர்கள். சுமார் 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா உக்கரைனுக்காக செலவு செய்தது. ஆனால் உக்ரைன் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டனர். அது மட்டும் இல்லை என்றால் போர் 1 வாரத்தில் முடிந்திருக்கும். ரஷ்யா உடனான இந்த போரில் உக்ரைன் வெல்லப்போவதில்லை. இருப்பினும் ஜெலன்ஸ்கியால் 3ஆம் உலக போர் ஏற்பட அபாயம் ஏற்பட்டுள்ளது” எனப் பேசினார். இதனால் ஜெலன்ஸ்கி டிரம்ப் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டடதாக கூறப்படுகிறது.
மேலும் டிரம்ப், உக்ரைன் அதிபர் நன்றி இல்லாமல் நடந்து கொள்கிறார். எனவே உக்ரைன் குழுவினரை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற உத்தரவிட்டார். இதனால் பொருளாதார ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திடாமல் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதன் பின்னர் வெள்ளை மாளிகையில் நடந்த விருந்தில் பங்கேற்காமலும் ஜெலன்ஸ்கி அங்கிருந்து கிளம்பி சென்றார். இது தொடர்பாக செய்தி நிறுவனத்திடம் பேசிய ஜெலன்ஸ்கி, ‘அமெரிக்க அதிபரிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவையில்லை என்று நான் கருதுகிறேன்’ எனத் தெரிவித்தார்.