புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அதுபோல ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் போர் பதட்டமும் அதிகரித்தது. இந்நிலையி பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்ட இம்ரான் கான், அதில், 'பாகிஸ்தான் மக்களை பாதுகாக்கும் வலிமையும் திறனும் பாகிஸ்தான் அரசுக்கு நிச்சயம் உள்ளது. இதில் நாம் உறுதியாக இருக்கிறோம். புல்வாமா தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. ஆக்கிரமிப்பு நோக்கத்திலோ அல்லது வேறு விபரீத எண்ணத்திலோ இந்தியா ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டால் தக்க பதிலடி கொடுத்து திரும்ப தாக்குமாறு பாகிஸ்தான் ராணுவத்துக்கு கட்டளையிடப்பட்டு இருக்கிறது' என கூறியுள்ளார்.