Skip to main content

பைக்கில் சாகசம்; இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
youth in Qatar; bike adventure incident

கத்தார் நாட்டில் இருசக்கர வாகனத்தில் படுவேகத்தில் சென்று சாகசம் செய்த இளைஞரின் வாகனத்தை அந்நாட்டு அரசு சுக்குநூறாக நொறுக்கிய சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, கத்தார் நாட்டில் இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணித்து சாகசம் செய்துள்ளார். மேலும், அவர் சாகசம் செய்த காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானதை அடுத்து பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். ஏனென்றால், கத்தார் நாட்டில் பொது சாலைகளில் முன் அனுமதியின்றி சாகசம் செய்வது என்பது பெரும் குற்றமாக கருதப்படுகிறது. அந்த வகையில், இளைஞரின் சாகச வீடியோவின் அடிப்படையில் இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, பைக் ஓட்டுநரான இளைஞரை கைது செய்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் சட்ட நடவடிக்கை எடுத்தது. அதன் அடிப்படையில், இளைஞரின் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் அரவை இயந்திரத்தில் போட்டு சுக்குநூறாக நொறுக்கியுள்ளனர். இது குறித்து, உள்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், அந்த வீடியோவை பகிர்ந்து, இது போன்ற அத்துமீறல்களை ஒருபோதும் அனுமதிக்க இயலாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் டி.டி.எஃப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி (17.9.2023) சென்ற போது பைக்கில் சாகசம் செய்து, விபத்தில் சிக்கி அவரை கைது செய்த வழக்கில், அவருடைய பைக்கை எரித்துவிட வேண்டும் என்று நீதிபதி சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

சுட்டெரிக்கும் வெயிலால் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Due to the scorching heat, the two-wheeled vehicle is on incident

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தண்டபாணி மகன் விஷ்ணு (28). இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் கோயில் எம்ஜிஆர் கல்லூரி பகுதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வாகனத்திலிருந்து ஏதோ புகை வந்ததை அறிந்த விஷ்ணு பதறிப் போய் வாகனத்தை நிறுத்திவிட்டு பார்க்கையில் பெட்ரோல் டேங்க்கில் இருந்து கசிந்த பெட்ரோல் வாகனத்தின் மீது பட்டு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விஷ்ணு உடனடியாக நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு அருகாமையில் கேனில் இருந்த தண்ணீரை ஊற்றி உள்ளார். இருப்பினும் தீ கட்டுக்கடங்காமல் இருசக்கர வாகனம் முழுவதும் மளமளவென தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது. வாகனம் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டு சிதறி ஓடி உள்ளனர்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் இருசக்கர வாகனம் முழுவதும் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான வெப்பம் கோடை காலங்களில் நிலவுகிறது. இந்த ஆண்டு வெப்ப காற்றும், வெப்ப சலனமும் தொடர்ச்சியாக கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக வீசிக் கொண்டிருக்கிறது. வேலூர், திருவண்ணாமலை,  திருப்பத்தூர், விழுப்புரம் போன்ற தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் 107 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் வானிலை மையத்தினரும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வயதானவர்கள், உடல்நலம் சரியில்லாதவர், குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் வைத்திருக்கின்றனர்.

இந்த அதீத வெப்பத்தால் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் டேங்க் வெடிப்பது, தீப்பற்றி எரிவது போன்றவை நடக்கத் தொடங்கியுள்ளன . இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கோடை காலங்களில் வாகனங்களில் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்ப வேண்டாம், டீசல் நிரப்ப வேண்டாம் தினமும் ஒரு முறையாவது பெட்ரோல் டேங்க் மூடியை திறந்து அதில் உள்ள காற்றை சிறிது நேரம் வெளியேற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.

Next Story

தமிழக அரசு சார்பில் கத்தார் தமிழர் சங்கத்திற்கு பாடப்புத்தகம் வழங்கல்!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
TN Govt to provide textbooks to the Qatar Tamil Society

கத்தார் தமிழர் சங்கத்திற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் தமிழ் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கத்தார் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான 5 ஆயிரத்து 450 தமிழ் பாடப் புத்தகங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (13.03.2024) கத்தார் தமிழர் சங்கத்திற்கு வழங்கினார். இப்புத்தகங்களை கத்தார் தமிழர் சங்க நிர்வாகிகளான லட்சுமி மோகன் (ஒருங்கிணைப்பாளர்), அடிலாஸ் மகேந்திரன், செந்தில் (வளைகுடா தமிழ்ச்சங்கம்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் கஜலட்சுமி மற்றும் இணை இயக்குநர் சங்கர சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.