இன்று அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய இந்த தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
டிரம்ப்பின் அறிவுறுத்தலின்பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்தது. இந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. "சுலைமான் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு நிச்சயம் தக்க பதிலடி காத்திருக்கிறது" என அயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய ஹசன் ரவ்ஹானி, "அமெரிக்காவின் இந்த கொடூர குற்றத்திற்கு ஈரான் மற்றும் அதன் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளும் பழிவாங்கும் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்கா தனது குற்ற நடவடிக்கையால் ஈரானின் இதயத்தை காயப்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் கொடுமைகளுக்கு எதிராக நிற்கவும், இஸ்லாமிய மதிப்புகளை பாதுகாக்கவும் ஈரான் தனது உறுதியை இரட்டிப்பாக்கியுள்ளது. அமெரிக்காவின் இந்த கோழைத்தனமான செயல், அதன் விரக்தி மற்றும் பலவீனத்தின் மற்றொரு அறிகுறியாகும். அமெரிக்கா அதன் செயலுக்கு நிச்சயம் பழிவாங்கப்படும்”என்றும் தெரிவித்தார்.