எலிகளை அதிகம் சாப்பிட்டதால் ஆந்தைக்கு விநோதமான பிரச்சனை ஒன்று வந்துள்ளதை தற்போது மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இங்கிலாந்தின் போக் ஆந்தைகள் சரணாலயத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்தை ஒன்றை அதிகாரிகள் கொண்டு வந்தனர்.கடந்த மூன்று மாதங்களாக அந்த ஆந்தை பறக்கவில்லை என்பதையும் சரணாலய மருத்துவரிடம் அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் ஆந்தையை நன்கு சோதித்தனர்.
அப்போது ஆந்தையின் உடல் எடை 245 கிராம் இருப்பதை கண்டறிந்துள்ளனர். ஆந்தைகளின் சராசரி எடையை விட இதன் எடை அதிகமாக இருப்பதே ஆந்தை பறக்க முடியாமல் அவதிப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும், ஆந்தை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் நிறைய எலிகள் இருந்துள்ளதையும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளார்கள். இதனால் எலிகளை ஆந்தை அதிகம் சாப்பிட்டதால் உடல் எடை கூடியிருப்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். தற்போது ஆந்தைக்கு டயட் பயிற்சியினை மருத்துவர்கள் அளித்து வருகிறார்கள். விரைவில் ஆந்தை பறக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.