சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சுவீடன் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சுவீடன் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியத் துணைக்கண்ட ஜனநாயக சக்திகள் மட்டுமின்றி, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.நா அமைப்பு என உலகெங்கும் எதிர்ப்பு குரல் வலுத்து வருகிறது. இந்திய ஒன்றியெங்கும் சாதி, சமய வேறுபாடின்றி பெருந்திரள் மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். இந்நிலையில், பிப்ரவரி 14 ஆம் தேதி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நம் தமிழக உறவுகள் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் அணிதிரண்டு அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனநாயக சக்திகளின் குரல்களின் அங்கமாக ஒலித்த நம் தமிழக உறவுகளை, காவல்துறை அதிகாரிகள் முதலில் மிரட்டியும், பிறகு பெண்களை இழுத்துச் சென்று, வாகனங்களில் ஏற்றி, போராட்டக் களத்தில் இருந்து அப்புறப்படுத்த முனைந்த வேளையில், இதைக் கண்டித்த சகோதரர்களை தமிழக காவல்துறை கண்மூடித்தனமாக தடியது நடத்தியுள்ளது. பழைய வண்ணாரப்பேட்டையில் காவல்துறை நடத்திய தடியடியில் படுகாயமுற்று 70 வயது முதியவர் அமீர் உயிரிழந்திருக்கிறார்.
பெண்கள், முதியோர், இளையோர் என அனைவரையும் கொடூரமாக நடத்தியுள்ள காவல்துறையினரையும் தமிழக அரசையும் பெரியார் அம்பேத்கார் வாசகர் வட்டம் (சுவீடன்) வன்மையாகக் கண்டிக்கிறது.
இத்தகைய வன்முறை வெறியாட்டத்திற்கு எதிராக தமிழகமெங்கும் திரண்டு கண்டனம் தெரிவிக்கும் தமிழக மக்கள், சமூக இயக்கங்கள், ஜனநாயக சக்திகள், அரசியல் கட்சிகள் என அனைவருக்கும் பெரியார் அம்பேத்கார் வாசகர் வட்டம் (சுவீடன்) ஆதரவு தெரிவித்துக்கொள்கிறது.
”அதிமுக தலைமையிலான தமிழக அரசாங்கமே, பதவி விலகு!” என்னும் கோசம் ஓங்கி ஒலிக்கட்டும் என கூறப்பட்டுள்ளது.