Skip to main content

கூகுள் நிறுவனத்துக்கு 593 மில்லியன் டாலர் அபராதம் விதித்த பிரான்ஸ்!

Published on 14/07/2021 | Edited on 14/07/2021

 

google

 

ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்த புதிய டிஜிட்டல் பதிப்புரிமை வழிமுறையை, கடந்த 2019ஆம் ஆண்டு பிரான்ஸ் நாடு சட்டமாக்கியது. இந்தச் சட்டத்தின்படி, கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள், ஊடகங்கள் வெளியிடும் செய்திகளைத் தங்கள் தளங்களில் பயன்படுத்திக்கொள்ள, அந்த செய்தி நிறுவனங்களுக்கு இழப்பீடாக ஒரு தொகையைத் தர வேண்டும்.

 

இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதன் தொடர்ச்சியாக, ஊடக செய்திகளைப் பயன்படுத்திக்கொள்ள இழப்பீடு வழங்குவது தொடர்பாக, ஊடகங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டுமென்று கூகுள் நிறுவனத்துக்கு பிரான்ஸ் உத்தரவிட்டது. இதனையடுத்து கூகுள் நிறுவனம், இழப்பீடு ஒப்பந்தம் தொடர்பாக சில ஊடகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும் அவை தோல்வியில் முடிந்தது.

 

இதனையடுத்து கூகுள் நிறுவனம், பிரான்ஸ் ஊடகங்கள் தங்கள் செய்திகளை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்காவிட்டால், அந்தச் செய்திகளைத் தங்கள் தளத்தில் பயன்படுத்துவதில்லை என முடிவெடுத்தது. இதற்கு பிரான்ஸ் நாட்டின் சில முன்னணி ஊடகங்கள் எதிர்ப்பினை தெரிவித்தன. கூகுள் தனது சந்தை அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்வதுபோல் உள்ளதாக தெரிவித்ததோடு, அந்த ஊடகங்கள் இதுதொடர்பாக புகார் அளித்தன.

 

இதனைத்தொடர்ந்து, கூகுள் நிறுவனத்துக்கு 500 மில்லியன் யூரோக்களை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது பிரான்ஸ். இது அமெரிக்க மதிப்பில் 593 மில்லியன் டாலர்களாகும். மேலும், கூகுள் நிறுவனம் உத்தரவை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும் குற்றஞ்சாட்டியது. மேலும், தாங்கள் எவ்வாறு செய்திகளைப் பயன்படுத்துவதற்கு ஊடகங்களுக்கு இழப்பீடு அளிக்கப்போகிறோம் என்பதை கூகுள் நிறுவனம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தெரிவிக்காவிட்டால் ஒருநளைக்கு 900,000 யூரோக்களை அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் பிரான்ஸ் உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்