கரோனா தொற்று இங்கிலாந்து நாட்டில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், புதிய கட்டுப்பாடுகளைப் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று அறிவித்தார்.
கரோனா பரவல் ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வந்த காலகட்டத்தில், இதனால் அந்த பிராந்தியத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மார்ச் மாதம் முதல் கடுமையான ஊரடங்கு விதிகளை அமல்படுத்தியது. இதன் பலனாக அங்கு கரோனா பாதிப்பு சற்று குறைந்ததை தொடர்ந்து அங்கு ஊரடங்கு விளக்கிக்கொள்ளப்பட்டு பள்ளி-கல்லூரிகளைத் திறக்கப்பட்டதுடன், மக்கள் பொதுவெளியில் நடமாடவும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் சமீப காலமாக இங்கிலாந்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, அந்நாட்டில் புதிய கட்டுப்பாடுகளைப் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று அறிவித்தார். அதன்படி, "பார்கள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் அனைத்தும் வியாழக்கிழமை முதல் இரவு 10 மணி வரையே செயல்பட வேண்டும். திருமணங்களில் பங்கேற்கும் விருந்தினர்களின் எண்ணிக்கை 30-ல் இருந்து 15 ஆக குறைக்கப்படுகிறது.
விளையாட்டு மைதானம், விளையாட்டு கிளப்புகள் திறப்பது ரத்து செய்யப்படுகிறது. நிறுவனங்களின் ஊழியர்கள் முடிந்தால் வீட்டிலிருந்தே பணியாற்றலாம். அதேநேரம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி திறக்கலாம். இந்த கட்டுப்பாடுகள் அடுத்த ஆறு மாதங்கள் வரை நீடிக்கும். ஆனால் தொற்று அதிகரித்தால், இந்த ஆணை மேலும் நீட்டிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.