நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக குடியிருப்பு பகுதிகளில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 29 பேர் பலியான சம்பவம் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நடந்துள்ளது.
காங்கோவின் கோமா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, பெனி நகருக்கு 20 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. விமானத்தை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் விழுந்து விமானம் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது.
இந்த கோரவிபத்தில் விமானத்தில் பயணம் செய்தவர்கள் மற்றும் வீடுகளுக்குள் இருந்தவர்கள் என மொத்தம் 29 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். இந்த சம்பவம் அந்நாடு முழுவதும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.