அமெரிக்காவில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி தொடர்பான ஆய்வு முடிவுகளை சீன ஹேக்கர்கள் திருட முயற்சிப்பதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் திணறி வருகின்றன. இதுவரை அதிகாரபூர்வமாக இந்த வைரஸைக் கட்டுப்படுத்த மருந்துகள் எதுவும் கண்டறியப்படாத நிலையில், உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் சோதனை நிலையில் உள்ளன. இதில் குறிப்பாக இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்க தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும் கரோனா தடுப்பூசி குறித்த ஆராய்ச்சி முடிவுகளைச் சீனா திருட முயற்சிப்பதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
கரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த ஆராய்ச்சித் தகவல்களை சீன ஹேக்கர்கள் திருட முயற்சிப்பதாக அமெரிக்க உளவு அமைப்பு மற்றும் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் நம்புவதாக அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், விரைவில் சீன ஹேக்கிங் குறித்து ஒரு எச்சரிக்கையை வெளியிட அமெரிக்க உளவு அமைப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் இந்தக் குற்றசாட்டைச் சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து பேசிய சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், "அனைத்து இணையத் தாக்குதல்களையும் சீனா உறுதியாக எதிர்க்கிறது. கரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சியில் நாங்கள் உலகை வழி நடத்துகிறோம். எந்த ஆதாரமும் இல்லாமல் சீனாவை வதந்திகள் மற்றும் அவதூறுகளால் குறிவைப்பது ஒழுக்கக்கேடானது" எனத் தெரிவித்துள்ளார்.