
சுமார் 150க்கும் மேற்பட்ட செங்கல் தயாரிப்பு மால்கள், 10 குவாரிகள் என பணம் கொழிக்கும் தொழில்களைக் கொண்டது தென்காசி மாவட்டத்தின் சிறிய பகுதியான கடையம் பேரூராட்சியின் காவல் சரகம். கேரளா செல்கிற இந்தக் கனிமங்களின் 10 டயர், 12 டயர்களைக் கொண்ட கனரக லாரிகள், லாரிகளில் சப்ளையாகும் செங்கற்களின் லோடுகள் என கடையம் ரோடுகளின் ஏரியா பிசியாக இருக்கும். அத்தனை கனரக லாரிகளும் அங்குள்ள கிராமப்பகுதியிலிருந்து கடையம் நகரின் மெயின் சாலையைக் கடந்து செல்வதால் கிராமச் சாலைகள் தொடங்கி மெயின் பஜார் சாலை வரை அதிர்ந்து விரிவதால் அந்தந்தப் பகுதிகளுக்குச் செல்கின்ற வாட்டர் பைப் லைன்கள் சிதைந்து குடிதண்ணீர் வெளியேற மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற கனரகங்களின் போக்குவரத்தால் தான் இந்தப் பாதிப்பு, சாலைகள் சேதம் என்று பொதுமக்கள் சுட்டிக்காட்டியும் நடவடிக்கையின்றிப் போகவே, பொறுமை கடந்த பொதுமக்கள் அந்தக் கனிமக் கனரக வாகனங்களைச் சிறப்பிடித்துப் போராட்டம் நடத்திய நேரத்தில் கூட தடுக்க வேண்டிய கடையம் காவல் நிலையம் அன்றைக்கு மட்டும் பரபரப்பு காட்டி போக்குவரத்தைத் தடை செய்வதுண்டாம் ஆனால் அடுத்த சில நாட்களில் கனரக வாகனங்கள் பறக்கத் தொடங்கிவிடுவது ரெகுலராகியிருக்கிறது.
மக்கள் போராடுகிற போது வாகனங்கள் மடக்கப்படுவதும், பின் அவைகள் செயல்படுகிற கண்ணாம் பூச்சி ஆட்டத்தின் பின்னணியில் விஷயம் இருக்கிறது என்கிறார்கள். காவல் சரகத்தின் இத்தனை செங்கல் சூளைகள், குவாரிகளின் வாகனங்கள் தடையில்லாமல் செல்வதற்கு கடையம் காவல் நிலையத்தின் கரிசனம் பொருட்டு அண்டர் ஸ்டாண்டிங்கில் இருந்திருக்கிறது.
அத்தனை செங்கற் சூளைகளும் குவாரிகளும் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை தட்சிணையாக காவல் நிலையத்திற்கு முறையாக வைத்து விடுமாம். அந்த நிலைய அதிகாரிகள், வேண்டாம் போ என்று மறுத்தாலும் கூட தட்சிணை தவறாதாம். அவைகள் பிரிக்கப்பட்ட பிறகு அங்குள்ள இன்சுக்கு மட்டும், குரு தட்சிணையின் வெயிட் அதிகம் இருக்குமாம். இதில் அந்தக் காவல் நிலையம் மாறி வருகிற சில நேர்மையான இன்ஸ்கள் கூட தட்சிணையைத் தொடாமல் தள்ளி விட்டதும் உண்டாம்.

இந்தக் க்ளைமேட்டில் தான் கடையம் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா மாறுதலாகி வந்திருக்கிறார். வழக்கம் போல் வருகிற அன்பளிப்புகளின் பகுதி அவருக்கு மட்டும் ’எல்’கள் அளவுக்கு கிடைத்திருக்கிறது. வருவதை மடைமாற்றாமல் ஏற்றுக் கொள்வது என்பது அவரது பாலிசியாம்.
இந்நிலையில், அந்தக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடையம் அருகிலுள்ள புலவனூரைச் சேர்ந்த ஒருவர் நெல்லை மாவட்டத்தின் பணகுடிப் பகுதிக்கு வேலையாகச் சென்றவர், அங்குள்ள புள்ளி ஒருவரிடம் வாங்கிய பணத்தைத் திரும்பத்தராமல் ஊர் திரும்பியவர் இழுத்தடித்திருக்கிறார். இதனால் ஆத்திரமான அந்தப் புள்ளி, அந்த நபரைக் கடத்தித் தூக்கிவர பணகுடி பகுதியின் செல்வகுமாரிடம் அசைன்மென்ட் தந்திருக்கிறார்.
தனது ஜீப்பில் புலவனூர் சென்ற செல்வக்குமார் அந்தப் புள்ளியைத் தன் வாகனத்தில் கடத்தி தூக்கி வந்த சம்பவத்தில் கடையம் இன்ஸ் மேரி ஜெமிதா செல்வக்குமாரைக் கைது செய்ததுடன் அவரின் ஜிப்பையும் பறிமுதல் செய்திருக்கிறார். அந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வந்த செல்வக்குமார் கடையம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்திருக்கிறார். அதனால் பெருத்த சங்கடத்திற்கு ஆளான செல்வக்குமார் இந்த வழக்கிலிருந்து மீளவும் தனது வாகனத்தை மீட்கவும் முடியாமல் தவித்திருக்கிறார்.
'யோவ் ஏன்யா ஸ்டேஷனுக்கு நடையா அலையுற. பேசாம அந்த இன்ஸ்பெக்டர போயிப் பாருய்யா. முடிஞ்சிறும்' என ஸ்டேஷன் போலீசார் ஒருவர் ரூட் கொடுக்க, செல்வக்குமார் இன்ஸ் மேரி ஜெமிதாவைச் சந்தித்திருக்கிறார். முப்பதாயிரம் தான்யா. தந்தா இந்த வழக்கு சீக்கிரமா முடிச்சு ஆள் கடத்தலுக்குப் பயன்படுத்திய உன் வாகனத்தையும் வெளிய கொண்டு வர ஏற்பாடு பண்றேம் என்றிருக்கிறாராம்.
ஆனாலும் இவ்வளவு லஞ்ச குடுக்கணுமா. மனம் நொந்து போன செல்வக்குமார் தன் வேதனையை தென்காசி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியிடம் வெளிப்படுத்தியிருக்கிறாராம். அவரிடம் புகார் வாங்கிய லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சில டெக்னிக்களைச் சொல்லி, ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுக்களை தரும்படி அவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
திட்டப்படி ஏப் 12 அன்று அந்த ரூபாய் நோட்டுக்களை அப்படியே கொண்டு செல்லாமல் வேண்டியவர்களுக்கு அன்பளிப்பாக பழம் தருவதைப் போன்று, வெளியே தெரியாமல் இருக்க, மணத்தைக் கிளப்புகிற கொய்யாப்பழம், பணம் அடங்கிய பையோடு கடையம் காவல் நிலையம் கொண்டு சென்ற செல்வக்குமார், அங்கிருந்த இன்ஸிடம் பவ்யமாக கொடுத்து 'கேஸை சீக்கரமா முடிச்சு எம் வாகனத்தைக் குடுங்கம்மா' என்று இன்ஸ் மேரி ஜெமிதாவிடம் சொல்லித்தர, இன்ஸ்சும் வாங்கியிருக்கிறாராம்.
திட்டப்படி அங்கு மறைந்திருந்த தென்காசி லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. பால்சுதா் தலைமையிலான போலீசார் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதாவை பணப்பையும் கையுமாக வளைத்துக் கைது செய்திருக்கிறார்கள்.முப்பதாயிரம் லஞ்சப் பணத்தில் இன்ஸ் மேரி ஜெமிதா கைதானது ஏரியாவை ஏக பரபரப்பாக்கி இருக்கிறது. நாகர்கோயிலைப் பூர்வீகமாகக் கொண்ட இன்ஸ் மேரி ஜெமிதா அங்கு கப்பல் போன்று வீடு கட்டி வருகிறாராம்.
'லஞ்சம் கொடுப்பதும் குற்றம். வாங்குவதும் குற்றம்' காவல் நிலைய சுவரில் தொங்கும் வாசகம் இது. பேராசைகள் பெருத்த நஷ்டத்தில் தான் முடியும். ஆன்றோர் மொழி பொய்ப்பதில்லை.