
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த வடமாதிமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கீழ்ப்பட்டு கிராமத்தில் அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு நுகர்வோர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.புகார் அளித்தவரின் முகவரிக்கு இரவில் வீடு தேடிச்சென்ற மின்வாரிய ஊழியர்கள் ராஜா மற்றும் முருகன் ஆகிய இருவர், மது போதையில் வந்து புகார் தந்தவரை மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் போளூர் வட்டம் வடமாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரை அந்த கிராமத்திற்கு உட்பட்ட மின்சாரத் துறையில் பணிபுரியும் லைன்மேன் குமார் என்பவர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். 'டிஎஸ்பி இடம் சொல்லி உன் மீது வழக்கு பதிவு செய்வேன், என் மச்சான் எஸ்ஐயாக இருக்கின்றார். பார்க்கிறாயா உன்னை நான் என்ன செய்கிறேன்' என்று தகாத வார்த்தைகளால் திட்டி அவர் மீது வழக்குப்பதிவு செய்வேன் என்று மிரட்டுகிறார்.பொதுமக்கள் புகார் தந்தால் பிரச்சனையை தீர்க்க வேண்டிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புகாரே செய்யக்கூடாது என புகார் தந்த பயனாளியின் வீடு தேடிச் சென்று மிரட்டுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.