ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியது, ஆப்கான் மக்களை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பல்வேறு நாடுகளும் ஆப்கானில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் இன்று (16/08/2021) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஐ.நா.பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ், "பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக ஆப்கான் மாறாமலிருக்க சர்வதேச சமூகத்தின் நடவடிக்கை தேவை. ஆப்கானிஸ்தானில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் கவலை அளிக்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்களை நம்மால் கைவிட முடியாது. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஐ.நா.வின் முழு ஆதரவு உண்டு. அடுத்து வரும் நாட்கள் முக்கியமானதாக இருக்கும்; உலகம் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தான் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; அகதிகளை ஏற்றுக் கொள்ளவும், நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்கவும் அனைத்து நாடுகளும் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்றார்.
இந்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.